நகர் வளம் - புடை நகர்
கண் வலைக் காமுகர் என்னும் மாபடுத்து
ஒள் நிதித் தசை தழீஇ உடலம் விட்டிடும்
பெண் வலைப் படாதவர் பீடின் ஓங்கிய
அண்ணல் அம் கடிநகர் அமைதி செப்புவாம். 78
விண்புகு வியன் சினை மெலியப் பூத்தன
சண்பகத்து அணிமலர் குடைந்து தாது உக
வண் சிறைக் குயிலொடு மயில்கண் மாறு கூஉய்க்
கண் சிறைப் படுநிழல் காவு சூழ்ந்தவே. 79
கை புனை சாந்தமும் கடி செய் மாலையும்
மெய் புனை சுண்ணமும் புகையும் மேவிய
நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினால்
பொய்கைகள் பூம் படாம் போர்த்த போன்றவே. 80
கடி நலக் கரும்பொடு காய் நெல் கற்றையின்
பிடி நலம் தழீஇ வரும் பெருங் கைக் குஞ்சரம்
அடி நிலை இருப்பு எழு அமைந்த கல் மதில்
புடை நிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே. 81
சல சல மும் மதம் சொரியத் தம் தம்முள்
கொலை மருப்பு இரட்டைகள் குளிப்பப் பாய்ந்து இரு
மலை திளைப்பன என நாகம் ஆன்ற போர்
குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்தவே. 82
முத்து உடை வெண் மருப்பு ஈர்ந்து மொய் கொளப்
பத்தியில் குயிற்றிய மருங்கில் பல்வினைச்
சித்திரக் கிம்புரி வைரம் சேர்த்துநர்
ஒத்துஇயல் இடங்களும் ஒழுங்கு நீண்டவே. 83
ஓடு தேர்ச் சாரிகை உகு பொன் பூமியும்
ஆடகம் ஆற்றும் தார்ப் புரவி வட்டமும்
கேடக வாள் தொழில் இடமும் கேடு இலாக்
கோடு வெம் சிலைத் தொழில் இடமும் கூடின்றே. 84
புடை நகர்த் தொழில் இடம் கடந்து புக்க பின்
இடை நகர்ப் புறம் பணை இயம்பும் ஓசை ஓர்
கடல் உடைந்தது எனக் கலந்தது அக் கடல்
மடை அடைத்து அனையது அம் மாக்கள் ஈட்டமே. 85
சிந்துரப் பொடிகளும் செம் பொன் சுண்ணமும்
சந்தன நீரோடு கலந்து தையலார்
பந்தொடு சிவிறியில் சிதறப் பார் மிசை
இந்திர வில் எனக் கிடந்த வீதியே 86
பாத்தரும் பசும் பொன்னின் மாடத்து உச்சி மேல்
தூத் திரள் மணிக் குடம் நிரைத்துத் தோன்றுவ
பூத்தன வேங்கை மேல் பொலிந்து கார் நினைந்து
ஏத்தரும் மயில் குழாம் இருந்த போன்றவே. 87
நெடுங் கொடி நிழல் மதி நெற்றி தைவர
உடம்பு வேர்த்து இன மழை உரறி நோக்கலின்
நடுங்குபு நல் வரை மாடத்து உச்சியில்
அடங்கி வீழ்ந்து அருவியின் அழுவ போன்றவே. 88
பொன் சிறு தேர் மிசைப் பைம் பொன் போதகம்
நல் சிறார் ஊர்தலின் நங்கைமார் விரீஇ
உற்றவர் கோழி மேல் எறிந்த ஒண் குழை
மற்று அத் தேர் உருள் கொடா வளமை சான்றவே. 89
மாலையும் பசும் பொ(ன்)னும் மயங்கி வார் கணைக்
கோல் எயும் குனி சிலை நுதலினாரொடு
வேல் இயல் ஆடவர் விரவி விண்ணவர்
ஆலயம் இது என ஐயம் செய்யுமே. 90
கல் சுணம் செய்த தோள் மைந்தர் காதலால்
நல் சுணப் பட்டு உடை பற்ற நாணினால்
பொன் சுணத்தால் விளக்கு அவிப்பப் பொங்கிய
பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே. 91
நலத்தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர்
உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம்
நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்க்
கலத்து உயர் கூம்பின் மேல் ஆடும் கௌவைத்தே. 92
இட்ட எள் நிலம்படா வகையில் ஈண்டிய
முட்டு இலா மூவறு பாடை மாக்களால்
புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகிய
மட்டு இலா வள நகர் வண்ணம் இன்னதே. 93
kural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment