அகழியின் தோற்றம்
தங்கு ஒளி நித்திலத் தாமம் சூடிய
வெம் களி இள முலை வேல் கண் மாதரார்
பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும்
கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம். 94
கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள்
ஆள் பெறா திரிதர அஞ்சிப் பாய்வன
மோட்டு இறா பனிக் கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து
ஈட்டறாப் புள் இனம் இரற்றும் என்பவே. 95
சிறை அனப் பெடையினோடு ஊடிச் சேவல் போய்
அறு பத வண்டு இனம் ஆர்ப்பத் தாமரை
உறைவது குழுவின் நீங்கி யோகொடு
கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே. 96
அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது
கருங் கலம் தோய்விலாக் காமர் பூந் துறை
குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம்
விருந்து செய்திட வெறி மேனி சேந்ததே. 97
பட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல்
அட்டு ஒளி அரத்தம்வாய்க் கணிகை அல்லது
மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால்
கட்டு உடைக் காவலின் காமர் கன்னியே. 98
நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல்
விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும்
குரை மதுக் குவளைகள் கிடங்கில் பூத்தவும்
உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே. 99
மதிலின் தோற்றம்
தாய் முலை தழுவிய குழவி போலவும்
மா மலை தழுவிய மஞ்சு போலவும்
ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய
சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே. 100
மாற்றவர் மறப் படை மலைந்து மதில் பற்றின்
நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும்
தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்
கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா 101
வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள்
கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செந் தீக்
கொல் புனை செய் கொள்ளி பெருங் கொக்கு எழில் செய் கூகை
நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே 102
செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்
வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெந் நெய் முகத்து உமிழ்வ
அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித்
தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறியே. 103
கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம்
குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண்நூல்
பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும்
திருந்து மதி தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்றே 104
வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும்
வயிர மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆக
வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல்
வயிரக் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே 105
kural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment