251. பாலை
தூதும் சென்றன; தோளும் செற்றும்;
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்;
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண் 5
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்,
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் 10
பணியாமையின், பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்,
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை 15
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி
மா நிலம் நௌயக் குத்தி, புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீள் இடைப் போகி,
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே. 20
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது. - மாமூலனார்
252. குறிஞ்சி
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி,
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி, 5
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட,
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத்
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித் 10
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்
பெருங் குளம் காவலன் போல,
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது. - நக்கண்ணையார்
153. பாலை
நோகோ யானே; நோதகும் உள்ளம்;
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி,
வெம்பும்மன், அளியள்தானே இனியே,
வன்கணாளன் மார்புஉற வளைஇ, 5
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு,
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின்,
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப் 10
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல்
வல்லுநள்கொல்லோ தானே எல்லி
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றி, 15
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின்
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர்
கை விடு சுடரின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?
மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது. - சேரமான் இளங்குட்டுவன்
154. முல்லை
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, 5
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; 10
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
நம் வயிற் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. 15
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்
155. பாலை
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம் 5
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது 10
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும் 15
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
156. மருதம்
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
மூட்டுறு கவரி தூக்கியன்ன,
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூதா தின்றல் அஞ்சி, காவலர்
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, 5
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
தீம் புனல் ஊர! திறவதாகக்
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, 10
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!
கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, 15
தணி மருங்கு அறியாள், யாய் அழ,
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார்
257. பாலை
வேனிற் பாதிரிக் கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம்,
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின்
பொம்மல் ஓதி பொதுள வாரி, 5
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள
நுண் கோல் எல் வளை தௌர்க்கும் முன்கை 10
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி,
வல்லுவைமன்னால் நடையே கள்வர்
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார்,
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து,
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து, 15
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்,
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ,
வெள் அரா மிளிர வாங்கும் 20
பிள்ளை எண்கின் மலைவயினானே.
உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
158. குறிஞ்சி
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, 5
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் 10
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்,
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு, 15
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர்
159. பாலை
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் 5
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி,
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும் 10
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன் 15
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின் 20
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார்
160. நெய்தல்
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த 5
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி, 10
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது 15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவச் சீறூர் காண,
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.
தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார்
261. பாலை
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர,
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த்
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல்
இலங்கு வளை தௌர்ப்ப வீசி, சிலம்பு நகச் 5
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்,
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு, 10
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்,
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே. 15
புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
262. குறிஞ்சி
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, 5
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் 10
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும் 15
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே.
இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
263. பாலை
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத் தோன்றி,
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம்
பயம் கெடத் திருகிய பைது அறு காலை,
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு, 5
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்,
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி,
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ! 10
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க,
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே! 15
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார்
264. முல்லை
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன,
குழை அமல் முசுண்டை வாலிய மலர,
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப்
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்,
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு, 5
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர,
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து,
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக,
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி,
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர் 10
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக்
காய் சின யானை கங்குல் சூழ,
அஞ்சுவர இறுத்த தானை
வெஞ் சின வேந்தன் பாசறையோரே? 15
பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார்
265. பாலை
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து,
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ் வரை மானும்கொல்லோ?
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை 5
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல்,
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து,
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு 10
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து,
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து,
அணங்கு அரு மரபின் பேஎய் போல
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க, 15
துகள் அற விளைந்த தோப்பி பருகி,
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர், பூசா வாயர்,
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும் 20
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ,
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மாமூலனார்
266. மருதம்
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின்
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை,
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ,
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ, 5
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண்
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலையாகி,
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து,
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் 10
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது 15
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
திரு மணி விளக்கின் அலைவாய்ச் 20
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே!
பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. -பரணர்
267. பாலை
'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து,
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து,
திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி,
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து,
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை, 5
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை,
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர,
மை பட்டன்ன மா முக முசுவினம்
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென 10
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய்,
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர்அல்லர்; நாளும்
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை 15
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த,
தோளே தோழி! தவறு உடையவ்வே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
268. குறிஞ்சி
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய 5
காமம் கலந்த காதல் உண்டுஎனின்,
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது, 10
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி,
செய்து பின் இரங்கா வினையொடு
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே!
குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
269. பாலை
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க!
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறுமார், 5
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் 10
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால்
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் 15
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர,
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தௌ விளி இயம்ப,
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ,
திரு நுதல் மகளிர் குரவை அயரும் 20
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின்
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
ஒண் செங் கழுநீர் அன்ன, நின்
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே. 25
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார்
270. நெய்தல்
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்,
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை 5
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே,
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான்
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
அம் மா மேனி தொல் நலம் தொலைய, 10
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே,
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்,
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே. 15
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார்
271. பாலை
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி,
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு,
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக்
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி, 5
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப்
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே, 10
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே,
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும்
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள், 15
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்,
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே?
செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
272. குறிஞ்சி
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப்
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி,
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, 5
தனியன் வந்து, பனி அலை முனியான்,
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகர,
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் 10
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும்,
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு,
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி,
உருவச் செந் தினை நீரொடு தூஉய்,
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! 15
என் ஆவது கொல்தானே பொன் என
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
273. பாலை
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின்,
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ,
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப,
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்,
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர் 5
அறியார்கொல்லோ, தாமே? அறியினும்,
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்,
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ?
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு 10
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி,
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை,
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி,
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம் 15
நில வரை எல்லாம் நிழற்றி,
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.
பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-அவ்வையார்
274. முல்லை
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து,
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம்
பருவம் செய்த பானாட் கங்குல்,
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி, 5
திண் கால் உறியன், பானையன், அதளன்,
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ, 10
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே.
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக் காடனார்
275. பாலை
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என, 5
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
மழலை இன் சொல், கழறல் இன்றி,
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
ஏதிலாளன் காதல் நம்பி, 10
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி 15
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
செம் புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?
kural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment